Aishu's blog

Saturday, 2 July 2016

விதிவிலக்கில்லாத விதியுமில்லை


இன்றைய சுவாதி - நாளைய நாம்...

     சென்ற ஆண்டு வெள்ளப்பெருக்கினூடே மனிதம் மீட்டெடுத்த அதே சென்னையில், சுவாதி கொலை. கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் கொலையாளியைக் கண்டுபிடித்திருக்கலாமாம். வேடிக்கையாக உள்ளது. கொலையாளியைக் கண்டுபிடிப்பது மட்டும் நம்முடைய நோக்கமாக இருக்கக் கூடாது. இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் தான் வெற்றி அடங்கியுள்ளது.

    நல்ல ஒரு கல்விமுறையினால் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பாலியல் கல்வி கூடாது எனக் கூறும் மக்களே, மூடி மூடி வைப்பதனால், அதை கிளர்ச்சியூட்டும் ஒரு விஷயமாக மட்டுமே கருதுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

     தங்கள் வீட்டுப் பெண் ஏதேனும் தவறு செய்தால், உடனே அவளை அடிப்பதோ, அறிவுரை கூறுவதோ, அல்லது வீட்டுச் சிறை வைப்பதோ என இறங்கும் பெற்றோர், தங்கள் மகன் தவறு செய்தால், அதை அவனிடம் சுட்டிக் காட்டும் மனநிலையில் கூட இல்லை. படித்த சமூகமே இவ்வாறுள்ள நிலையில், படிப்பறிவில்லாத இன்னும் எத்தனை எத்தனையோ மக்கள். ஆகையால் பிரச்சனையின் தீர்வு கேமரா பொருத்துவதில் மட்டுமில்லை.. வேல்யூ எஜுகேஷன் எனப்படும் நீதி வகுப்புகளில் தான் பொதிந்துள்ளது. வியாபாரம் போல் கல்வியை பாவிக்கும் இன்றைய பள்ளிக்கூடங்களில், வாரத்திற்கு ஒரு மணிநேரம் நீதி வகுப்பு எடுப்பதினால் மட்டும், வளரும் இளம்பருவத்தினரிடம்  எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. ஒரு மனிதனை முழுமையானவனாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது.

சுவாதி தன்னுடைய பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்திருக்கலாம்.. என்று கூறும் மக்களுக்கு,
சொல்லியிருந்தால் என்னவாகி இருக்கும்?

                  ·        சுவாதி பெற்றோரின் வற்புறுத்தலால் வேலையை ராஜினாமா செய்திருப்பார்
        
         ·    அவருடைய தந்தை ரயில் புறப்படும் வரை, உடன் இருந்து இருப்பார்.. இப்படி கற்பனையில் இன்னும் நிறைய பதில்களைக் கூறலாம்
ஆனால் இதனால் மட்டும் அவன்(ராம் குமார்) சுவாதியைக் கொல்லாமல் விட்டிருப்பானா என்ன? நுங்கம்பாக்கம் இல்லை என்றால் வேறொரு ரயில் நிலையம்.

சுவாதி  காவல் துறையில் புகார் அளித்திருக்கலாம்.. என்று கூறும் மக்களுக்கு,
                     
        ·    காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவனுக்கு புத்தி சொல்லி விடுவித்திருப்பார்கள்
அதனால் மட்டும் சுவாதியை மீட்டிருக்க முடியுமா என்ன? இன்று காதல் என்ற பெயரில் இக்கொலையைச் செய்திருப்பவன், வஞ்சம் தீர்க்க வரும் பாதகனாய் மாறியிருப்பான்.
     
     இன்றைய சுவாதி நாளைய நாமாகவும் இருக்கலாம். ஒருவேளை அவர் தவறே செய்திருந்தாலும், கொலை அதற்குத் தீர்வல்ல. அண்ணன் 'மாதிரி', தம்பி 'மாதிரி' என்ற 'மாதிரி' உறவுகள் என்றும் நிலையானவை அல்ல. கற்பழிக்கப்பட்ட பெண்ணுடன் புகைப்படம் எடுக்கும் ராஜஸ்தான் மாநில மகளிர் அமைப்பின் நபர்களும், நிர்பயா, ஜிஷா, அழகுசுமதிகளும் பெண்மையின் இரு வேறு துருவங்கள். தவறான பாதையில் செல்வது எளிது, மீள்வது கடினம். உண்மை சில நேரம் ஊமையாகலாம், எப்பொழுதும் அல்ல.

         "விடியாத இரவொன்றும் வானில் இல்லை"

சூழ்நிலைக் கைதிகளாய்த் தவிக்கும் எம் தோழிகளின் நிலை, என்றேனும் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையுடன் – நான்.